விழுப்புரம்:
புதுவை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், நவமால்காப்பேரியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் – விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்று மாலை சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, சிவபெருமானுக்கு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பல்வேறு காய்கறிகளால் மாலைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, எம்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு பூஜையின் நிறைவாக, கற்பூர தீபாராதனை நடைபெற்றபோது, பக்தர்கள் “எம்பெருமானுக்கு அரோகரா, காசி விஸ்வநாதருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு காசி விஸ்வநாதரை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.