காயல்பட்டினம், அக். 26:
சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் தலைவெட்டு மரண தண்டனையைக் கண்டித்து தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், இதனால் ஏற்படும் விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் கண்டித்து நான் வெளியிட்ட அறிக்கை சமூக வலைதளங்களில் பரவி, பல லட்சம் பேரின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கண்டனத்திற்கு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், ஒரு சிலர் என்னை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைக்கூலி என்றும், சமுதாயத் துரோகி என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொதுவாழ்க்கையில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்துள்ள எனக்கு, இதுபோன்ற விமர்சனங்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நாட்டில் மசூதிகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாதிக்கப்படும் இஸ்லாமியர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் என்னைச் சமுதாயத் துரோகி என்று கூறுபவர்கள், வெளிநாட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சவூதி அரேபியாவில் மனிதர்களுக்குத் தலைவெட்டும் முறையில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையைத்தான் நான் கண்டிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக நான் பேசியதில்லை; இனியும் பேசப்போவதில்லை. என்னை விமர்சிப்பவர்களைவிட மார்க்கச் சிந்தனையில் தெளிவாகவே இருந்து வருகிறேன்.
எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கொடூரமான முறையில் தலைவெட்டும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அதே போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஏன்? இதற்கு என்ன தீர்வு என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவில் தலைவெட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா ஓர் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், அங்கு இஸ்லாமியர்களுக்கே இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
சவூதி அரேபியாவின் நட்பு நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கும் இதேபோன்ற தண்டனை நிறைவேற்றப்படுமா? அதற்கு அந்த நாடுகள் அனுமதிக்குமா? இத்தகைய சூழலில் சவூதி அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதையும் இஸ்லாமியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் தலைவெட்டு மரண தண்டனையை ஆதரித்துப் பதிவிடுபவர்கள், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இதுபோன்ற தண்டனை நிறைவேற்றப்பட்டு, அவரது உடலைப் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டால், அப்போதும் அதனைச் சரியான தண்டனை என்று கூறுவார்களா? சவூதி அரசைப் பாராட்டுவார்களா?
மரண தண்டனை குறித்து எளிதாகப் பேசிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால், அந்தத் தண்டனையால் குடும்ப உறுப்பினரை இழக்கும் குடும்பத்தினருக்குத்தான் அதன் வலியும் வேதனையும் முழுமையாகத் தெரியும்.
எனவே, சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் தலைவெட்டு மரண தண்டனையைத் தொடர்ந்து எதிர்ப்பேன். இதனால் ஏற்படும் விமர்சனங்கள், பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.