பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 515 மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட ஆட்சியர் வ. சிவகிருஷ்ணமூர்த்தியின் அறிவுறுத்தலின்படி, காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
இதன்படி, போதைப்பொருள் பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போடிநாயக்கனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,648 மாணவ, மாணவிகளும், ராஜதானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 327 மாணவ, மாணவிகளும், தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 515 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இதன் மூலம் மொத்தம் 3,490 மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மதுப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மேலும், போதைப் பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ் மலர் கலைக்குழுவினர் சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபிகேசன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் சீராளன், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் சசீதீபா, மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுப்பிரியா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ. பாண்டி, அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.