கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் கார்த்திகை மாதத்தில் தொடங்க உள்ளதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கம்பம் மெட்டு மலைச்சாலையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் கம்பம் மெட்டு வரை செல்லும் மலைச்சாலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
சபரிமலை மண்டல பூஜைக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கம்பம் மெட்டு மலைச்சாலை வழியாகச் செல்வது வழக்கம். இதனால் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது, சாலையோரங்களில் உள்ள புதர்களை அகற்றவும், ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கவும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்குச் சாலை தெளிவாகத் தெரியும் வகையில் ஒளியைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் பொருத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மலைச்சாலையில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குதல், ஆபத்தான வளைவுகளில் முந்திச் செல்வதைத் தவிர்த்தல் மற்றும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுதல் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம், வருவாய்த்துறை ஆய்வாளர் ரவீந்திரன், வனச்சரகர் தீனதயாளன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.