கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், சமூக நலத்துறை சார்பில், “TRADITIONAL CUISINE – தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை மேம்படுத்தும் பாரம்பரிய உணவு முறைகள்” என்ற தலைப்பில் செய்முறைப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனச் செயலர் கம்பம் என். இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி இணைச் செயலாளர் ஆர். வசந்தன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் வி. பாரதி வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ரேணுகா வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் எஸ். பிரபாகரன், பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினார். ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், முளைகட்டிய பயறுகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், மூலிகைக் கசாயங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள் ஆகியவற்றின் பயன்களை எடுத்துரைத்தார்.
மேலும், பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளின் சிறப்புகள் குறித்தும், சிறுதானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களைச் செய்வது குறித்தும் செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார். பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள், கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை உதவிப் பேராசிரியர் எஸ். மணிமேகலை நன்றி கூறினார்.