கும்பகோணம், நவ. 1-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், வருகிற நவம்பர் 17-ந் தேதி சென்னையில் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் திருமங்கலக்குடியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லா தலைமை தாங்கினார். தமுமுக, மமக மாவட்டச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான் ஜாபர் மாவட்ட துணைத் தலைவர் நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஹிபாயத்துல்லா, முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ரஹ்மத் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியச் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் 3.5 சதவீதத்தைப் பெறுவதற்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தி ரத்து செய்துள்ளது. எனவே, அந்த அரசாணையை மீண்டும் திருத்தி, சட்டமன்றத்தில் பிரிவு 163-ன் விதியின்படி அமல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட 2 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்படவுள்ள போராட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் இருந்து பெருந்திரளான நிர்வாகிகளைப் பங்கேற்கச் செய்து வெற்றி பெறச் செய்வது குறித்து கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
முன்னதாக திருமங்கலக்குடி ஊராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு
நினைவு பரிசு வழங்கபட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் த.மு.மு.க.மற்றும் ம.ம.க. மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.முடிவில் கிளைப் பொருளாளர் பஜ்ருல் நூர் நன்றி கூறினார்.