காரைக்கால்மேடு மீனவக் கிராமத்தில் முதற்கட்டப் பணி தொடங்கியது – 11 மீனவக் கிராமங்களில் செயல்படுத்தத் திட்டம்

காரைக்கால்:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் சீற்றத்தால் ஏற்படும் நில அரிப்பைத் தடுக்கும் வகையில், 11 மீனவக் கிராமங்களில் மொத்தம் 22,000 பனை விதைகள் விதைக்கும் பசுமைப் பணித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆப்தமித்ரா மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படை தன்னார்வலர்கள் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி காரைக்கால்மேடு மீனவக் கிராமக் கடற்கரையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணை ஆட்சியர் பாலு (எ) பக்கிரிசாமி தலைமை தாங்கி, முதற்கட்டமாகப் பனை விதைகளை விதைத்துத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில் வனத்துறை அதிகாரி நந்தகுமார், ஆப்தமித்ரா ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ராமன், குடிமைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மணிகண்டன், நுகர்வோர் அமைப்பின் மாநிலச் செயலாளர் சிவகுமார், பூம்புகார் பனை அறக்கட்டளை நிர்வாகிகள் ரவீந்தர், பாரதி, முருகன், அப்துல் கலாம் பாசமலர் மற்றும் காரைக்கால்மேடு மீனவப் பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலோரப் பாதுகாப்பில் பனை மரங்களின் பங்கு!

நிகழ்ச்சியில் பேசிய அதிகாரிகள், கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், கடல் அலைகள் மற்றும் புயல் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் பனை மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இயற்கையான பாதுகாப்பு அரணாக விளங்கும் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதன் மூலம் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்தனர்.

இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் தலா 2,000 பனை விதைகள் வீதம் விதைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக காரைக்கால்மேடு மீனவக் கிராமத்தில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 22,000 பனை விதைகள் விதைக்கப்பட உள்ளன.

இப்பணியில் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், ஆப்தமித்ரா மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படை தன்னார்வலர்கள், மீனவப் பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று பனை விதைகளை விதைத்தனர்.

காரைக்கால் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளை இயற்கை அரிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், பசுமை வளத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *