தென்காசி,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்திய 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தென்காசி மாவட்ட மாநாடு, இலஞ்சி டேணியல் ராஜம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வழிகாட்டுதலின்படி, “நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் 70 ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.

மாநாட்டுக்கு பேராசிரியர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பால்மகேஷ், மாநிலத் துணைத் தலைவர் சுந்தரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஷீலா நவரோஸ் வரவேற்றார். சுரண்டை விளையாடு கற்றுக்கொள் அறிவியல் பூங்கா நிறுவனர் ஆறுமுகம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜ்சுதாஸ், முனைவர் ஆண்டணி சகாய ரூபன் ஆகியோர் செயல்பட்டு, ஆய்வுகளின் மதிப்பீட்டுப் பணிகளை ஒருங்கிணைத்தனர். மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் அம்பிகா, ஐயப்பன், சுமதி, ஆசிகா ஆகியோர் இணைந்து துளிர் வினாடி வினா போட்டியை நடத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் நெல்லை நாயகம் கலந்து கொண்டு, வனவளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

கல்லூரித் தாளாளர் ராஜாகுமார், ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த மாணவர்களுக்கு ‘இளம் விஞ்ஞானி’ பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். டெல்டா டிரேடர்ஸ் சார்பில் சுலைமான் வாழ்த்துரை வழங்கினார். தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன், இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக் கேடயங்களை வழங்கினார்.

துளிர் ஐந்தர் மந்தர் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் செயலாளர் திருவிலஞ்சி குமரன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இம்மாநாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி நெடுவயல், அச்சன்புதூர், மேலகரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடையநல்லூர், பாரத்வித்யா மந்திர் சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி இலஞ்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி துரைச்சாமிபுரம், ரத்னா உயர்நிலைப்பள்ளி கடையநல்லூர், ஷாலோம் மெட்ரிக் பள்ளி பாவூர்சத்திரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வுகள் சிறந்த ஆய்வுகளாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், வரும் நவம்பர் 24 முதல் 26-ம் தேதி வரை திருப்பூர் சசூரி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் தென்காசி மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சேக் உசேன் செய்திருந்தார். மாவட்டப் பொருளாளர் மதுபாலா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *