திருவாரூர்., நவ.02-

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் மது, புகை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலப் பொதுச் செயலாளர் தஞ்சை முஜிபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இதில் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மது, புகை மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், குடும்பச் சீரழிவு மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

மது மனிதனின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், குடும்ப உறவுகளிலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதேபோல் பீடி, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களால் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய தீய பழக்கங்களிலிருந்து இளைஞர்களும் மாணவர்களும் விலகி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அடியக்கமங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே தொடங்கிய மாரத்தான், திருவாரூர்–நாகை தேசிய நெடுஞ்சாலை வழியாக சுமார் 1.25 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தத்தில் மாரத்தான் நிறைவடைந்தது.

மாரத்தானில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல், போதையில்லா இளைய தலைமுறையையும் ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *