தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றிய வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆதார அறையில் இயன்முறை மருத்துவம் (Physiotherapy) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்விசார் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்று, தொடர்ந்து பள்ளிக் கல்வியைத் தொடங்குவதற்கு ஏதுவாகப் புதிய பள்ளி ஆயத்தப் பயிற்சி மையம் குண்டடம் வட்டார வளமைய வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. விழாவில் குண்டடம் பேரூராட்சித் தலைவர் மோகன்ராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்ற தீபாவளித் திருநாள் கொண்டாட்டமான ‘கூடி மகிழ்வோம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20 மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தீபாவளிப் பரிசாக 5 கிலோ அரிசி, இனிப்பு, காரம் மற்றும் பட்டாசுப் பெட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திலகவதி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜாமணி, தர்மராஜ் மற்றும் தாராபுரம் வட்டாரக் கல்வி அலுவலர். பாமா ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், ஆசிரியர் பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பள்ளி ஆயத்தப் பயிற்சி மையத்தில் ஓர் ஆசிரியர் மற்றும் ஓர் உதவியாளர் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவரின் ஒருங்கிணைப்புடன் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடிப்படைக் கல்விப் பயிற்சிகளைப் பெற்று, பள்ளிக் கல்வியில் தொடர்ந்து இணைந்து பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *