தலைமை இயக்குநர் விரேந்திர வாட்ஸ் தொடங்கி வைத்தார் – மாணவர்களுக்கு ட்ரோன், சைபர் செக்யூரிட்டி பயிற்சி

திருச்செங்கோடு, நவ.3-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு KSR தொழில்நுட்பக் கல்லூரியில், நாட்டின் முதல் NCC ட்ரோன் பைலட் பயிற்சிப் பள்ளியை, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் விரேந்திர வாட்ஸ் நேற்று முன்தினம் (நவ.2) தொடங்கி வைத்தார்.

DGCA அங்கீகாரம் பெற்ற இந்தப் பயிற்சி மையம், 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி, இரவு-பகல் பயிற்சி, நவீன வகுப்பறைகள், திறன்மிகு பயிற்றுநர்கள், மாணவர்களுக்கான தங்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவில் பேசிய விரேந்திர வாட்ஸ், ”வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 இலக்கை எட்டும் வகையில், NCC மாணவர்களுக்கு ட்ரோன், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்படும். நாடு முழுவதும் ட்ரோன் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

மேலும், NCC பயிற்சி முடித்து ‘சி’ சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் 20 லட்சம் பேர் NCC-யில் உள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேர் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றும் கூறினார்.

முன்னதாக, ட்ரோன்கள் மூலம் மீட்புப் பணிகள், முதலுதவி மற்றும் மனிதர்களை மீட்பது தொடர்பான செயல்முறை விளக்கங்களை அவர் பார்வையிட்டார்.

இதே கல்லூரியில் அக்டோபர் 23-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை நடைபெற்ற முதலாவது தேசிய அளவிலான NCC இயக்குநரகங்களுக்கு இடையேயான ட்ரோன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தப் போட்டியில் முதலிடம் பெற்ற வடகிழக்கு மண்டல இயக்குநரகத்துக்கு ட்ரோன் கோப்பையும், 2-ம் இடம் பெற்ற மகாராஷ்டிரா இயக்குநரகத்துக்கு பாராட்டும் வழங்கப்பட்டது.

விழாவில் KSR கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சீனிவாசன், துணைத்தலைவர் கே.எஸ். சச்சின், NCC அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *