உத்தமபாளையம், நவ.3-

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் இறந்த தங்களது முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் கல்லறைகளில் குடும்பத்தினர் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதன்படி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி, கம்பம் பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டங்களில் கல்லறை திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதற்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையே கல்லறைத் தோட்டங்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. கல்லறைகளைச் சுற்றி வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு, திங்கட்கிழமை காலையில் கல்லறைகளுக்கு புதிய வண்ணங்கள் பூசப்பட்டன. மேலும், வண்ண மலர்கள் மற்றும் பலூன்களால் கல்லறைகள் அலங்கரிக்கப்பட்டன.

தொடர்ந்து, இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளைப் படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி குடும்பத்தினர் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள இராயப்பன்பட்டி, கோகிலாபுரம், தேனி, பெரியகுளம், சின்னமனூர், ஆண்டிப்பட்டி, கம்பம், புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் தங்களது மறைந்த முன்னோர்களை நினைவுகூர்ந்து மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *