தேனி மாவட்டம் தமிழகம் கேரளத்தை இனிக்கும் இரு மாநில எல்லையை யொட்டி அமைந்துள்ளதால், கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலையில் ஜெகநாத் மிஸ்ரா போலீசாருடன் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டார்.இந்த நிலையில், இன்று மாலை 3 மணியளவில் கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கம்பம் மெட்டு காலனி, உதயா நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு போலீசாருடன் சென்றார்.

அப்போது அங்கு பொலிரோ ஜீப்பில் சுமார் 35 மூட்டை ரேஷன் அரிசி ஏற்றப்பட்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர் வருவதைப் பார்த்த கடத்தல்காரர்கள் ஜீப்பை வேகமாக இயக்கித் தப்ப முயன்றனர்.

அப்போது ஜெகநாத் மிஸ்ரா ஜீப்பை மறிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் அவர் மீது ஜீப்பை மோதச் செய்து கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.உடனடியாக சுதாரித்துக் கொண்ட எம்.எல்.ஏ. பின்னால் நகர்ந்ததால் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து ஜீப்பில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், உத்தமபாளையம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய நபரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரேஷன் கடைகளில் யார் யாரிடம், எந்தெந்த கடைகளில் அரிசி வாங்கப்பட்டது என்பது தொடர்பான குறிப்புகள் அடங்கிய நோட்டுகளை கைப்பற்றினர்.

மேலும், வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 மூட்டை ரேஷன் அரிசியை ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில்போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜீப்பில் கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தப்பியோடியவர்களைப் பிடிக்க குமுளி, கம்பம்மெட்டு, கம்பம், போடிமெட்டு உள்ளிட்ட மலைச்சாலைப் பகுதிகளில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ

ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறியது

ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் ஜீப்பில் ரேஷன் அரிசியுடன் இருந்தவர்கள் வாகனத்தை வேகமாக இயக்கினர். நான் வாகனத்தை மறித்தபோது என் மீது ஜீப்பை மோதச் செய்து கொலை செய்ய முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு விலகியதால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினேன் என்றார்

கம்பத்தில் பட்டப்பகலில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கச் சென்ற சட்டமன்ற உறுப்பினரையே ஜீப்பால் மோதிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *