தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலிபாளையம் கிராமத்தில் ரூ.13.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அமராவதி தென்னை நார் தொழில் குழுமத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை முன்னிட்டு முதலிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் குத்துவிளக்கேற்றி தொழிற்கூடத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அமராவதி தென்னை நார் தொழில் குழுமம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு, 34 உறுப்பினர் நிறுவனங்களைக் கொண்ட எம்.எஸ். அமராவதி காயர் புரொட்யூசர் கம்பெனி லிமிடெட் என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.13.95 கோடியாகும். இதில் ரூ.8.75 கோடி அரசு மானியமாகவும், ரூ.5.20 கோடி நிறுவனத்தின் பங்களிப்பாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்கூடக் கட்டடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.5.36 கோடியும், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் நிறுவுவதற்காக ரூ.8.59 கோடியும் செலவிடப்பட்டுள்ளன.

இந்தத் தொழிற்கூடத்தின் மூலம் தென்னை நார் நூல், சாயமிடப்பட்ட தென்னை நார் நூல், தென்னை நார் புவி விரிப்புகள், மிதியடிகள் மற்றும் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதன் மூலம் 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 100 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் சுமார் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தொழிற்கூடக் கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் நிறுவும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்க இத்தொழில் குழுமம் தயாராக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் கார்த்திகைவாசன், அமராவதி காயர் புரொடக்ஷன் கம்பெனி நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *