பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
திருவாரூர் மாவட்டம்
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மத்திய மற்றும் மாநில அரசின் வேளாண் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷி விக்யான் கேந்திரா (KVK) விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திட்டங்களின் நோக்கம், முக்கிய அம்சங்கள், விவசாயிகளுக்குக் கிடைக்கும் பயன்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து மாணவிகள் விளக்கினர்.
மத்திய அரசின் திட்டங்கள்:
பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் நீர் சேமிப்பு மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்தை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படுவது குறித்தும், “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” (Per Drop More Crop) என்ற அதன் நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், பருப்பு வகைகளுக்கான ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் மூலம் உற்பத்தியை அதிகரித்தல், தரமான விதைகள் வழங்குதல் மற்றும் 100 சதவீதம் கொள்முதல் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் குறித்தும் விளக்கினர்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள்:
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் இடுபொருட்கள், தடையற்ற மும்முனை மின்சாரம் மற்றும் நெல் இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படுவது குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் சூரிய சக்தி பம்ப் செட்கள் வழங்கப்படுவது குறித்தும் விளக்கினர்.
3G இயற்கைப் பூச்சி விரட்டி – செயல்விளக்கம்:
தொடர்ந்து, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் 3G இயற்கைப் பூச்சி விரட்டி தயாரிக்கும் செயல்விளக்கத்தை மாணவிகள் செய்து காண்பித்தனர். இது அசுவினி, மாவுப்பூச்சி, இலைப்பேன், பச்சை போர்வைப்புழு, தண்டுத் துளைப்பான், இலை சுருட்டுப்புழு மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம் என்றும் விளக்கினர்.
அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் அறிந்து பயன்பெறவும், இயற்கை சார்ந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றி நிலையான வேளாண்மையை மேம்படுத்தவும் மாணவிகள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் மாணவிகள் கயல்விழி ஆ., கீர்த்தனா இ., கோகிலா ஸ்ரீ கு., கோகீஸ்வரி மு., கௌஷிகா ர., லக்க்ஷிதா மு.கு., லாவண்யா க., லாவண்யா ச., லேகவர்ஷினி சி.ச., லிஷா ர., லெட்டிசியா மரியா ஜனனி அ. மற்றும் ஷாதியா பங்கேற்று விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் அளித்தனர்.