கடலூர் புதிய சுற்றுலா மாளிகை கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் சுற்றுலா மாளிகை கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
கடலூர், மஞ்சக்குப்பத்தில் ரூ.600.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சுற்றுலா மாளிகை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 1,260 சதுர மீட்டர் (13,557.60 சதுர அடி) ஆகும். தரைத்தளத்தில் 4 விஐபி தங்கும் அறைகள், வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறை, சமையலறை, சேமிப்பு அறை, பராமரிப்பாளர் அறை மற்றும் மின்சார அறை ஆகியவை அமைக்கப்படுகின்றன. முதல் தளத்தில் 1 விவிஐபி அறை, 2 விஐபி அறைகள் மற்றும் மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும், இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை தரமான முறையில் மேற்கொள்வதுடன், பணிகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின்போது,வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், பொதுபணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) கௌதமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.