திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் மின்சாரப் பெட்டியில் திடீர் தீ விபத்து – அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்; ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 5-வது பிளாக்கில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மின்சாரப் பெட்டியில் (EB Box) திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைப் பார்த்த அப்பகுதியில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள், கட்டிடத்தில் வசித்து வந்த பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீ மற்றும் புகையைக் கண்டு அச்சமடைந்தனர். சிலர் அச்சம் காரணமாக உடனடியாகக் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த எண்ணூர் தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், கட்டிடத்தில் சிக்கியிருந்த பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால் சுனாமி குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.