திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை செலுத்துவதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகம் பல மடங்கு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஒரு கிலோ நெய் காணிக்கைக்கு ரூ.250 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தக் கட்டணம் ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிலோவுக்கு ரூ.350 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரை கிலோ நெய்க்கு ரூ.300, கால் கிலோ நெய்க்கு ரூ.150 என புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெய் கொள்முதல் விலையை ஒப்பிடும்போது, இதுவரை பக்தர்களிடம் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது வெளிச்சந்தை விலையைக் காட்டிலும் அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழா என்பது பக்தர்களின் நம்பிக்கையுடனும் பாரம்பரியத்துடனும் தொடர்புடைய முக்கிய விழாவாகும். இத்தகைய சூழலில், பக்தர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல் நெய் காணிக்கை கட்டணத்தை திடீரென உயர்த்தியிருப்பது ஏன்? என ஆன்மீக ஆர்வலர்களும் பக்தர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், கட்டண உயர்வு குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாதது ஏன் என்றும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்து பழைய கட்டணத்தையே தொடர கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்களின் பக்தியையும் பாரம்பரியத்தையும் கருத்தில் கொண்டு, நெய் காணிக்கை கட்டண உயர்வை கோயில் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யுமா? என்பதே தற்போது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.