ராணிப்பேட்டை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் கடத்தப்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையிலும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி வழிகாட்டுதலின்படி, பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளர் ப. நாகேந்திரன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், ரயில்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்துகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், போதைப்பொருட்களைக் கண்டறிவதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட ‘சாரா’ என்ற மோப்பநாயின் உதவியுடன், பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ரயில் நிலையத்தில் சென்னை – காட்பாடி பயணிகள் ரயிலில் சோதனை நடத்தப்பட்டது. ரயில் பெட்டிகளின் ஒவ்வொரு பகுதியிலும் சோதனை மேற்கொண்ட போலீசார், பயணிகள் வைத்திருந்த பைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய உடைமைகளை மோப்பநாய் உதவியுடன் பரிசோதித்தனர்.

தொடர்ந்து, பேருந்து நிறுத்தம் மற்றும் தனியார், அரசு பேருந்துகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயணிகள் வைத்திருந்த பைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய உடைமைகளை போலீசார் சோதனையிட்டதுடன், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுப்பது குறித்தும் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்தச் சோதனையின்போது சிறப்பு உதவி ஆய்வாளர் கோகுல் மற்றும் காவலர்கள் ராஜ்கமல், சசிகுமார், நரசிம்மன், சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *