காயல்பட்டினம், நவ. 05:
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இளைஞர் ரிஸ்வான் ஆஷிக் என்பவர் கும்பலால் கட்டி வைத்து தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரிஸ்வான் ஆஷிக் என்பவர், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி அவரைப் பிடித்து கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆஷிக்கை காவல்துறையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ரிஸ்வான் ஆஷிக்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆஷிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், அவரை சட்டப்படி காவல்துறையிடம் ஒப்படைப்பதே முறையான செயலாகும். மாறாக, ஒருவரைக் கட்டிப்போட்டு கும்பலாகத் தாக்கி உயிரிழக்கச் செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவது சட்டத்தின் ஆட்சிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான செயலாகும்.
மேலும், இந்தச் சம்பவத்தில் பலர் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் முறையாக விசாரிக்கப்பட்டு, உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களிடமும் விசாரணையைத் தீவிரப்படுத்தி, சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.