கும்பகோணம்:கும்பகோணம் குயின்ஸ் ரோட்டரி சங்கத்தால் தத்தெடுக்கப்பட்ட திருச்சேறை – பந்தி கிராமத்தில் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிராம மக்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் Rtn. N.அண்ணாதுரை தலைமை வகித்தார். சங்கத்தின் சாசன தலைவர் Rtn.சுனோலியா பீட்டர் பிரான்சிஸ் வரவேற்புரை வழங்கி பேசுகையில், “தத்தெடுத்த கிராமத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, கிராம மக்களின் மகிழ்ச்சிக்காகவும் ரோட்டரி சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார். பந்தி கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ரோட்டரி மாவட்ட மண்டல உதவி ஆளுநர்கள் Rtn. MPHF. S.பாபுராஜா, Rtn. Su.வெங்கடேசன், Rtn.ரவீந்திர குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அவர்கள் பேசுகையில், சேவை மனப்பான்மையுடன் கிராம மக்களுக்காக செயல்படும் குயின்ஸ் ரோட்டரி சங்கத்தின் பணிகளை பாராட்டினர்.
பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மண்டல உதவி ஆளுநருமான Rtn. B.சிவச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சிறப்பு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட ஆளுநருமான Rtn. PDG. Er. S.பிறையோன் சிறப்புரை ஆற்றுகையில், “தீபாவளி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது மனங்களை இணைக்கும் பாலம். கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி மலர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன” என்றார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கிராமத்தைச் சேர்ந்த 200 பெண்களுக்கு புத்தாடையாக புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. புத்தாடை பெற்ற பெண்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
சங்கத்தின் செயலாளர் Rtn. R.கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn. PHF. Dr. S. N.செழியன் சிறப்பாக செய்திருந்தார்.