பேராவூரணி, நவ.05:
அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.
இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அணுகுமுறை, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையை தடுக்கத் தவறியது, பொது விநியோகத் திட்டத்தை பலவீனப்படுத்தியது ஆகியவையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
பண்டிகை காலத்திலும் விலைவாசி கட்டுக்குள் வராததால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மாநில அரசும் நியாயவிலைக் கடைகள் மூலம் போதுமான பொருட்களை வழங்காமலும், விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிடாமலும் மெத்தனமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றியச் செயலாளர் சி.ஆர்.சிதம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அவர்கள் பேசுகையில், “அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் நியாயவிலைக் கடைகள் மூலம் தடையின்றி வழங்க வேண்டும், பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த தோழர்கள் வீ.கருப்பையா, மகாலிங்கம், நீலமோகன், நவநீ, உலகநாதன், ராமலிங்கம், ருக்கூன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை குறிக்கும் வகையில், மளிகை பொருட்களை மாலையாக அணிந்தும் காய்கறிகள், அரிசி மூட்டை, வாழைத்தார் ஆகியவற்றை அடுக்கி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
பேராவூரணி நீலகண்டன் .