பாதுகாப்பு வலைகள் சேதம்; புதர் மண்டிக் கிடக்கும் மீன் வளர்ப்புப் பகுதி – சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தின் கீழ் வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்புப் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பயிற்சி நிலையத்தில் உள்ள மீன் வளர்ப்புப் பகுதி போதிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
மீன் வளர்ப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலைகள் மட்கி கிழிந்துள்ளதுடன், வலைகளைத் தாங்கி நிற்கும் பிடிப்புக் கட்டைகளும் உடைந்து சேதமடைந்துள்ளன. மேலும், மீன் வளர்ப்புப் பகுதி முழுவதும் புதர்கள் மண்டிக் கிடப்பதால், பணியாளர்கள் மீன்களுக்கு முறையாக உணவிடக்கூட முடியாத சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
புதர்களுக்குள் விஷ ஜந்துக்கள் நடமாடும் அபாயம் உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடனேயே பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மீன் வளர்ப்புப் பணிகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்தப் பகுதியைப் பராமரித்து சீரமைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உதவி இயக்குநர் சசிகலா, மீன்வள ஆய்வாளர் கிரிஜா மற்றும் மண்டல அலுவலர் இளங்கோ ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, மணிமங்கலத்தில் உள்ள மீன் வளர்ப்புப் பகுதியை முழுமையாகச் சீரமைக்க வேண்டும். சேதமடைந்த பாதுகாப்பு வலைகளைப் புதிதாக அமைத்து, உடைந்த கட்டைகளைச் சரிசெய்து, புதர்களை அகற்றி விஷ ஜந்துக்களின் அச்சமின்றி பணியாளர்கள் பணியாற்றுவதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.
மேலும், மீன் வளர்ப்புப் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி, அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.