தூய்மை பணியாளர்களுக்கு த.மு.மு.க., ம.ம.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் பங்கேற்பு சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க அழைப்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருப்பூர் செட்டி மண்டப அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவுக்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லா தலைமை தாங்கினார். த.மு.மு.க., ம.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், ஜாபர் அலி மற்றும் முன்னாள் மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவர் ரஹ்மத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் அப்துல் காதர் வரவேற்றுப் பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன், உள்ளூர் ஊராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!
முன்னதாக செய்தியாளர்களிடம் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் கூறியதாவது:
25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி ரத்து செய்துள்ளது.
எனவே, அந்த அரசாணையில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சட்டமன்றத்தில் பிரிவு 163-ன் விதியின்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நடைபெற உள்ள போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பர்ஹான் மற்றும் த.மு.மு.க., ம.ம.க. மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.