ஷரோன் ரேச்சல் அபி 3 தங்கம், துர்காஸ்ரீ 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்று அசத்தல் – அரசு உதவிக்காக முதல்வரிடம் கோரிக்கை!

கிர்கிஸ்தானில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்ற 4வது ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 14 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ரேபிட், பிளிட்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்/கிளாசிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து இரண்டு ஆண் வீரர்கள், இரண்டு பெண் வீராங்கனைகள் என மொத்தம் நான்கு பேர் இந்திய அணியில் இடம்பெற்று போட்டியில் பங்கேற்றனர்.

குறிப்பாக, சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுக்குட்பட்டோர் பிரிவு வீராங்கனை ஷரோன் ரேச்சல் அபி, ஸ்டாண்டர்ட், ரேபிட், பிளிட்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வீராங்கனை துர்காஸ்ரீ, 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஸ்டாண்டர்ட், ரேபிட், பிளிட்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இரண்டாம் இடம் பிடித்து மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களுடன் கஜகஸ்தானில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்தடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கும் சென்னை விமான நிலையத்தில் அவர்களது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வீராங்கனைகள், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். அரசு உரிய நிதியுதவியும் ஊக்கமும் அளித்தால் இன்னும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்காகப் பதக்கங்களை வென்று சாதிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் தங்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், தற்போதைய தமிழக முதல்வர் விஜய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதார் அர்ஜுனா ஆகியோர் தங்களை நேரில் சந்தித்து, தங்களது நிலைமையைப் புரிந்துகொண்டு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அதிகப்படியான ஊக்கத்தொகை, பயிற்சி வசதிகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவு உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

சர்வதேச அளவில் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த இளம் வீராங்கனைகளின் சாதனையைப் பாராட்டுவதுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டுப் பயணத்திற்கு அரசு உரிய ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *