தென்காசி மாவட்டம் புளியரை அருகே தோப்புக்குச் சென்ற 72 வயது முதியவரை காட்டு யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், புளியரை தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (72). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை சுமார் 7 மணியளவில் புளியரை அருகே உள்ள கொட்டாவிகுளம் பகுதியில் அமைந்துள்ள தனது தோப்பிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவர் சென்ற பாதையில் திடீரென காட்டு யானை ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பையா, வயது முதிர்வு காரணமாக அங்கிருந்து ஓட முடியாமல் பாதையின் ஓரமாக நின்றுள்ளார். அப்போது வேகமாக வந்த யானை அவரை கீழே தள்ளி நெஞ்சில் மிதித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புளியரை காவல் நிலையத்திற்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புளியரை போலீசார், பொதுமக்களின் உதவியுடன் சுப்பையாவின் உடலை மீட்டு தெட்சிணாமூர்த்தி கோவில் அருகே கொண்டு வந்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சுப்பையாவின் உடல் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக புளியரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியர் காட்டு யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் புளியரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. தி.மு. ராஜேந்திரன் கோரிக்கை
உயிரிழந்த சுப்பையா பிள்ளையின் குடும்பத்திற்கு உரிய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளுக்குள் புகுவதைத் தடுக்க வனத்துறையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் காட்டு விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடனும் அச்சத்துடனும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே சட்டப்பேரவையிலும் பேசியுள்ளேன்.
விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. இதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோவதுடன், பயிர்ச் சேதங்களால் விவசாயிகளுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இத்தகைய துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, வனவிலங்குகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இதற்குத் தேவையான நவீன கருவிகள், உபகரணங்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், காட்டு யானை தாக்கி உயிரிழந்த சுப்பையா பிள்ளையின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி முழுமையாகக் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.