காயல்பட்டினம், நவ. 09:

தேனி மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சமதர்மபுரம் பகுதியில் தீபாவளி இரவில் பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலையை மறித்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த சிலரைத் தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது, மது போதையில் இருந்த சமூக விரோத கும்பல் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் நிலைதடுமாறிக் கீழே விழுந்த செந்தில்குமாரை பொதுமக்களும் காவல்துறையினரும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், அவரது பிள்ளைகளுக்கு அரசு வேலை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனால், தமிழ்நாடா? கொலைநாடா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிக்கே இத்தகைய நிலை ஏற்பட்டால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகும்? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது மிகுந்த கவலைக்குரியது.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். காவல்துறையினர் மீது இனிவரும் காலங்களில் தாக்குதல் நடத்த நினைப்பவர்களுக்கு இந்தத் தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையை வலுப்படுத்தி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *