துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – புதுச்சேரி அரசுக்கு திமுக வலியுறுத்தல்!
ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கே குப்பைக்காடாக மாறும் புதுச்சேரி – அனிபால் கென்னடி குற்றச்சாட்டு!
புதுச்சேரியின் தூய்மையையும், அழகையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவதில் துப்புரவு தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதற்கு நேர்த்தியான சாலைகள் மட்டுமின்றி, தூய்மையான சுற்றுச்சூழலும் முக்கியக் காரணமாகும். நகரின் தூய்மையைப் பாதுகாக்கும் துப்புரவு தொழிலாளர்களின் உழைப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியுள்ள நிலையில், நகரின் தூய்மையைப் பேணிக்காக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மட்டும் போனஸ் வழங்காமல் புறக்கணித்திருப்பது வேதனையளிக்கிறது.
ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றினாலும், அவர்களுக்கும் பண்டிகைக் கால போனஸ் பெறுவதற்கான உரிமையும், நியாயமான எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், அவர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால், இன்று துப்புரவு தொழிலாளர்கள் தூய்மைப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே ஒரு நாள் துப்புரவுப் பணிகள் நிறுத்தப்பட்டதற்கே புதுச்சேரி நகரம் முழுவதும் குப்பைகள் குவிந்து, தூய்மைப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள்கூட இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை. இதே நிலை நீடித்தால் புதுச்சேரியின் தூய்மையான நகரம் என்ற அடையாளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறையும் அபாயம் உள்ளது.
வீட்டில் சிறிதளவு குப்பை சேர்ந்தால்கூட நாம் அருவருப்படைகிறோம். அப்படியிருக்க, ஒரு நகரமே குப்பைகளால் சூழப்பட்டால் மக்களின் நிலை என்னவாகும் என்பதை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய தீபாவளி போனஸை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களை ஊக்கப்படுத்தி மீண்டும் தூய்மைப் பணிகளைத் தொடரச் செய்ய வேண்டும்.
புதுச்சேரியின் தூய்மையைப் பாதுகாக்கும் தொழிலாளர்களைப் புறக்கணிப்பது நகரத்தின் நலனையே பாதிக்கும். எனவே, அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வு காண வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி தெரிவித்துள்ளார்.