நாகப்பட்டினம், நவ. 9:
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட சியாத்தமங்கை, அம்பல், போலகம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கத்தரி, வெண்டை, புடலை, பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய், தண்டுக்கீரை, மிளகாய் மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் வயல்களை தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் மற்றும் துணை தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) செல்லபாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் நெல், பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பாரம்பரிய பயிர்களையே தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு மாற்றாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கத்தரி, வெண்டை, புடலை, பாகற்காய், மிளகாய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற மாற்றுப் பயிர்களை சோதனை அடிப்படையில் சாகுபடி செய்ய திருமருகல் ஒன்றிய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காய்கறி சாகுபடிக்கு ஏற்ற உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் முறையான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.