S.முஹம்மது தாரிக் அன்வர்
செய்தியாளர்

நாகூர், நவ. 10: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழா இன்று (10.11.2026) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு இன்று மதியம் நாகப்பட்டினத்திலிருந்து கந்தூரி விழா கொடி ஊர்வலம் புறப்பட்டு, மாலை நாகூரை வந்தடைகிறது. தொடர்ந்து நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் ஊர்வலம், இரவு 9 மணியளவில் தர்காவின் அலங்கார வாசலைச் சென்றடைகிறது.

அப்போது ரதம் மற்றும் பல்லக்குகளில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் புனிதக் கொடிகள் இறக்கப்பட்டு, ஆண்டகையின் ரவ்லா ஷரீபுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு பாத்திஹா மற்றும் துஆ ஓதப்பட்ட பின்னர், தர்கா முன்புள்ள பிரதான பெரிய மினாரா மற்றும் தர்கா வளாகத்தில் அமைந்துள்ள நான்கு மினாராக்கள் என மொத்தம் ஐந்து மினாராக்களிலும் ஒரே நேரத்தில் புனிதக் கொடிகள் ஏற்றப்பட உள்ளன.

கந்தூரி விழாவையொட்டி நாகூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகூருக்கு வருகை தந்து வருகின்றனர்.

விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நாகூர் தர்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *