தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கோரிக்கை
நாமக்கல், நவம்பர் 10:
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு, தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்குவதற்கு மேற்கொண்டு வரும் முயற்சியை முறியடிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து புதுடெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அங்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதையும், காவிரி நீர் உரிமைக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அனைவரின் சார்பிலும் எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தின் காவிரி உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் பிரதமரைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.