தமிழகத்தின் முதல் கிளை; இந்தியாவின் இரண்டாவது கிளையாக சாய்பாபா காலனியில் அறிமுகம்!
கோவை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற அழகு நிலைய நிறுவனமான ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ (Jean Louis David), தனது புதிய கிளையை கோவை சாய்பாபா காலனியில் விரைவில் தொடங்க உள்ளது. 65 ஆண்டுகால பிரெஞ்சு அழகுக்கலை பாரம்பரியத்தைக் கொண்ட இந்நிறுவனத்தின் தமிழகத்தின் முதல் கிளையாகவும், இந்தியாவின் இரண்டாவது கிளையாகவும் இந்த மையம் அமைய உள்ளது.
கடந்த 1961-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான அழகு நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. பிரெஞ்சு அழகுக்கலை நுட்பங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சேவைகளை வழங்கி வருகிறது.
கோவையில் புதிய கிளை தொடங்குவது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதன் உரிமையாளர் சூர்யபிரகாஷ் கூறியதாவது:
“அழகுக்கலைத் துறையில் உலக அளவில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ள ஜீன் லூயிஸ் டேவிட் நிறுவனத்தை கோவைக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 65 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய அழகுக்கலை நுட்பங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் முக அமைப்பு, தனித்துவம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சிகை அலங்காரங்களை உருவாக்குவது இந்நிறுவனத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். சர்வதேச அளவில் ஒரே மாதிரியான பயிற்சி முறைகளில் பயிற்சி பெற்ற கலைஞர்கள் மூலம் தரமான சேவைகளை வழங்குவது இதன் தனிச்சிறப்பு.
கோவையில் தொடங்கப்பட உள்ள இந்த மையத்தின் வாயிலாக, உலகத்தரம் வாய்ந்த அழகு மற்றும் சிகை அலங்காரச் சேவைகளை உள்ளூர் மக்களும் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆடம்பரமான அழகு நிலைய அனுபவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது என்ற நிலையை மாற்றி, தரமான அழகுக்கலைச் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
தொழில்முனைவுத் துறையில் எனக்குள்ள அனுபவத்துடன், சர்வதேச நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் இணைத்து கோவையில் இந்தப் புதிய முயற்சியைத் தொடங்குகிறோம். எதிர்காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் ஜீன் லூயிஸ் டேவிட் நிறுவனத்தின் சேவைகளை விரிவுபடுத்துவதே எங்களது இலக்கு” என்றார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய அழகுக்கலையையும் சர்வதேச தரத்திலான நவீன சிகை அலங்காரச் சேவைகளையும் கோவைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், சாய்பாபா காலனியில் அமைய உள்ள இந்தப் புதிய அழகு நிலையம் விரைவில் தனது சேவையைத் தொடங்க உள்ளது.