கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி மேல்நிலைப்பள்ளி சார்பில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் மேயர் ரங்கநாயகி, கவுன்சிலர் சாந்தி முருகன், பள்ளியின் தாளாளர் மார்ட்டின் பட்டருமடத்தில், முதல்வர் டாக்டர் ஜெ. தனலட்சுமி ஆகியோர் இணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தப் பேரணியில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, போக்குவரத்து சிக்னல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பள்ளி மாணவர்கள் சிலர் மது பாட்டில்களின் தோற்றத்தில் வேடமணிந்து, பாடல்களைப் பாடியபடி பேரணியில் பங்கேற்றனர். மாணவர்களின் இந்த நூதன விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளைத் தவிர்த்து, உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *