தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக வெற்றிக் கழக அரசுக்குக் கண்டனம் – முழு ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தல்

மதுரை: செவிலியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பிரேமலதா தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர்கள் பி. மணிமேகலை, கே. ஸ்ரீமதி, ஹெலன் எஸ்தர் ராஜாத்தி, துணைத் தலைவர்கள் கவிதா, கிருஷ்ணம்மாள், கௌசல்யா மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெனிபர், சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் டி. ராஜி வரவேற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் சி.க. சுஜாதா தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தாமரைச்செல்வி செவிலியர்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களைக் குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யும் அரசின் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு முழு ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 2,500 செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்தப் பணிமுறையை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், செவிலியர்களின் போராட்டங்களுக்கு காவல்துறை நடவடிக்கைகள் மூலம் தடைகளை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றனர்.

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் செவிலியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அதே கோரிக்கைகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவது என்ன வகையான மாற்றம் என்றும் கேள்வி எழுப்பினர்.

பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் செவிலியர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதையும், செவிலியர்கள் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டதையும், போராட்டம் நடைபெற்ற இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் முழு ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. தமிழ், பொருளாளர் பரமசிவன் உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் நீதிராஜா நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் சகாயடெய்சி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *