காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுடன் கிடைத்த ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையை, அப்பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி செல்வி என். காவியாவுக்கு வழங்கி பாராட்டினார்.

இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் இருந்து தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் பெற்றார். இதனுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், தனக்குக் கிடைத்த விருதுக்குக் காரணமான மாணவர்களை நினைவுகூரும் வகையிலும், அந்தப் பரிசுத்தொகை முழுவதையும் தன்னிடம் பயின்று பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி காவியாவின் உயர்கல்வி வளர்ச்சிக்காக வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது மாணவி காவியா, வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கி பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கோபிநாதன் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமை தாங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், கல்வி என்பது ஒருவரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. எனவே, மாணவர்கள் அனைவரும் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு சிறந்து விளங்க வேண்டும். தீய பழக்கவழக்கங்கள் எளிதில் நம்மை ஈர்த்துவிடும் என்பதால், அவற்றுக்கு ஆட்படாமல் நல்லொழுக்கம், நற்பண்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, மாணவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியை வேதலட்சுமி, முதுகலைத் தமிழ் ஆசிரியை வஞ்சி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மாணவி காவியாவை வாழ்த்தினர்.

தனக்குக் கிடைத்த நல்லாசிரியர் விருதின் பரிசுத்தொகையை, தான் பயிற்றுவித்த மாணவியின் உயர்கல்விக்காக வழங்கிய தலைமை ஆசிரியர் தனஞ்செழியனின் மனிதநேயமிக்க செயல், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *