படப்பை: படப்பை அருகே ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரின் மனைவி தனலட்சுமி (22). நிறைமாத கர்ப்பிணியான இவர், படப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவப் பரிசோதனைக்காக வந்துள்ளார்.
அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, தனலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால், ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அப்போது, ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர் தேவி, தனலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார்.
இதில், தனலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, தாயும், சேயும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் உள்ளனர்.
பிரசவத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நாகேந்திரன் உடனிருந்தார். உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு தாய்க்கும், குழந்தைக்கும் உதவிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தேவியின் பணியைப் பொதுமக்கள் பாராட்டினர்.