நாகப்பட்டினம்,
திட்டச்சேரி அருகே 3 பேரிடம் இருந்து 35 கிலோ புகை யிலைப் பொருள்களை திட்டச்சேரி போலீசார் பறிமுதல் செய்தனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமண்ய பாலச்சந்திரா உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், போலீசாருக்கு கிடைத்த ரகசியத்தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் ஹலீலுர் ரஹ்மான் தலைமையிலான காவல்துறையினர் திட்டச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில், படுதார்கொல்லை, திருப்பட்டினத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 26), மாரிமுத்து (வயது 38), ஜெயசீலன் (வயது 28) ஆகிய மூவரிடமிருந்து 35 கிலோ ஹான்ஸ், குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 கைப்பேசிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.