சட்டவிரோத தொழில்களைக் கைவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. எச்சரிக்கை!
கம்பம்: கம்பம் சட்டமன்றத் தொகுதியில் ரேஷன் அரிசி கடத்தல், அனுமதியின்றி மது விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தங்களது சட்டவிரோத தொழில்களைக் கைவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித பாரபட்சமுமின்றி இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட நாட்டுக்கல், மின்வாரியத் தெரு, தண்ணீர்த் தொட்டித் தெரு, காமாட்சி கவுண்டர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கவும், சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரி முறையாகப் பராமரிக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்து, கழிவுநீர் குடிநீரில் கலக்காத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் பழைய பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களை முறையாக அகற்றி, அவற்றின் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மின்வாரியத் தெருவில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே செயல்பட்டு வரும் பெட்டிக்கடையில், உரிய அனுமதியின்றி பார் வசதி ஏற்படுத்தி மது விற்பனை நடைபெறுவதை ஆய்வின்போது கண்டறிந்தார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:
கம்பம் தொகுதியில் இனி சட்டவிரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ரேஷன் அரிசி கடத்தல், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் அரசு விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கம்பம் தொகுதியில் இனி இடமில்லை.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்களது சட்டவிரோத தொழில்களைக் கைவிட்டு, கண்ணியமான மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டும். அதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் எவ்வித பாரபட்சமுமின்றி இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் செல்வேந்திரன், செயற்குழு உறுப்பினர் அய்யர் மற்றும் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.