திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட உள்ள தன்னார்வ இளைஞர்களுக்கு மக்கள் நண்பர்கள் குழு மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) முதல்வர் ஏ.தனகீர்த்தி தலைமை தாங்கினார்.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தன்னார்வ சேவைப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
சுவாமி ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், குற்றச் செயல்களைத் தடுத்தல், காவல்துறையினருக்குத் தகவல் அளித்தல், மலை மீது அத்துமீறிச் செல்வோரைத் தடுப்பது, கிரிவலப் பாதையைத் தூய்மையாகப் பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர்.
கடந்த 26 ஆண்டுகளாக மக்கள் நண்பர்கள் குழுவினர் மூலம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் தொடர்ந்து சமூக சேவையாற்ற முன்வந்துள்ள தன்னார்வலர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டைகளை மக்கள் நண்பர்கள் குழு மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் வழங்கினார்.
இதில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஐடிஐ விடுதிக் காப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் கே.தனப்பன், பயிற்சி அலுவலர்கள் சி.ஆறுமுகம், வி.உமாசங்கர், மக்கள் நண்பர்கள் குழு மாவட்டத் துணை அமைப்பாளர்கள் கே.மல்லிகார்ஜுனன், எஸ்.ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் காவல்துறையுடன் இணைந்து சேவைப் பணியில் ஈடுபட உள்ள இளைஞர்களுக்கு மக்கள் நண்பர்கள் குழு மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். அருகில் ஐடிஐ முதல்வர் ஏ.தனகீர்த்தி, உடற்பயிற்சி அலுவலர் கே.தனப்பன், பயிற்சி அலுவலர்கள் சி.ஆறுமுகம், வி.உமாசங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.