தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து, அவற்றை முறையாகப் பராமரித்து செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பழுதடைந்துள்ள மற்றும் புனரமைக்கப்பட வேண்டிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைக் கண்டறிந்து, அவற்றைச் சீரமைப்பதற்கான விரிவான செயல்திட்டத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே, நகராட்சி ஆணையாளர்கள் தேனி, போடிநாயக்கனூர் செல்வி எஸ். பார்கவி, பெரியகுளம், கூடலூர் தமிஹா சுல்தானா, கம்பம், சின்னமனூர் உமாசங்கர், போடிநாயக்கனூர் நகராட்சி பொறியாளர் வி. குணசேகரன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கம்பம் புதுப்பட்டி வெ. கணேசன், காமயகவுண்டன்பட்டி எம்.ஏ. ஹர்ஷத், அனுமந்தன்பட்டி ரவி, கோம்பை எம். அமானுல்லா, ஓடைப்பட்டி அழகர்சாமி, தேவாரம் வி. அன்பழகன், பண்ணைப்புரம் மணிகண்டன், மேலசொக்கநாதபுரம் து. மோகன்குமார், வடுகபட்டி கா. கல்பனாதேவி, பூதிப்புரம் சோ. ராஜேஷ், அய்யனார் முருகன், தென்கரை அ. பஷீர் அகமது, பழனிசெட்டிபட்டி, மார்க்கையன்கோட்டை எம். சிலம்பரசன், வீரபாண்டி சா. இளங்கோவன், போடி மீனாட்சிபுரம் சி. யோகஸ்ரீ, தேவதானப்பட்டி ரவிச்சந்திரன், தாமரைக்குளம் முருகன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *