ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – சர்வதேசக் குற்ற வலையமைப்பை முழுமையாகக் கண்டறிய வேண்டும்!

மாவீரர் மக்கள் கழகத் தலைவர் எம்.கே.பாஸ்கரன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை தொடர்பான செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன.

சென்னை மாதவரம் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கெனவே நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சுமார் 135 முதல் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான கடத்தல் விவகாரத்தில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் எவ்வாறு கொண்டு வரப்படுகின்றன? இதன் பின்னணியில் செயல்படும் சர்வதேசக் கடத்தல் கும்பல்கள் யார்? அவர்களுக்கு உதவியாகச் செயல்படுபவர்கள் யார்? இத்தகைய குற்றச் செயல்களுக்குப் பின்னால் உள்ள முழுமையான வலையமைப்பைக் கண்டறிந்து, தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

போதைப்பொருள் பிரச்சினை என்பது தனிமனிதனின் உடல்நலத்தை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல. இது இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாணவர்களின் கல்வியையும், குடும்பங்களின் அமைதியையும், ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பையும் சீரழிக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும்.

குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதைத் தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்தலில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், பணபலமிக்கவர்கள் அல்லது அதிகாரிகளின் துணை இருப்பது விசாரணையில் தெரியவந்தால், எவ்விதப் பாரபட்சமுமின்றி அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. மத்திய, மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சமூகக் கடமையாகும்.

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலுக்கான பாதையாகவோ, பதுக்கல் மையமாகவோ, விற்பனைச் சந்தையாகவோ மாறுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

எனவே, மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் செயல்படும் கடத்தல் கும்பல்களின் தொடர்புகளைக் கண்டறிந்து, இந்தக் குற்ற வலையமைப்பை வேரறுக்க வேண்டும் என்று மாவீரர் மக்கள் கழகத் தலைவர் எம்.கே.பாஸ்கரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *