​கோவை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக வரவேற்பதாக இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள இந்து முன்னணி மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த உரிமைக்காக இந்து முன்னணி கடந்த 36 ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருவதாகவும், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று முருக பக்தர்களுடன் இணைந்து தீபம் ஏற்ற முயன்று இந்து முன்னணியினர் கைதாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் தீபம் ஏற்றலாம் எனத் தீர்ப்பு வழங்கியும், அப்போதைய திமுக அரசு அந்தத் தீர்ப்பை மதிக்காமல் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என்றும், அதேபோல் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் உச்ச நீதிமன்றத்தில் முருக பக்தர்களுக்கு எதிராகத் தீபம் ஏற்றுவதைத் தடுக்க முயற்சி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எனவே, தற்போது தீபம் ஏற்றலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தவெக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறி இந்து விரோத சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழகத்தில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் கே. தசரதன், செய்தித் தொடர்பாளர் சி. தனபால், கோட்டப் பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன் மற்றும் கோட்டச் செயலாளர் த. குணா ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *