திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே விளாகம் கிராமத்தில், மறைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளர் தமிழ்க்கதிர் என்ற பி.டி.ரவியின் இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் வன்னியரசு, அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு, மாநில உரிமைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதாகவும், குழந்தைகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் கூறினார்.

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் யாகம் வளர்த்தது குறித்து பேசிய அவர், யாகம், ஜோதிடம், பில்லி சூனியம் போன்றவை அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கைகள் என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே குற்றவாளிகளையும் காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது என்றும், மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் இந்த விவகாரம் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் வன்னியரசு கூறினார்.

மேலும், செக்கானூரணி பாலகிருஷ்ணன் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மரணம் தொடர்பான சர்ச்சைக்கு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *