திருவாரூர்., நவ.21-

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி ஊராட்சி தீபாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் – வசந்தா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகனான செல்வம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஓட்டுநர் வேலைக்காக மலேசியா சென்றுள்ளார்.

மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த செல்வம், இந்த மாத இறுதியில் சொந்த ஊருக்கு வருவதாக தனது தாயிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். மகனின் வருகையை எதிர்பார்த்து குடும்பத்தினர் காத்திருந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக வந்த தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

செல்வம் வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர் அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, செல்வம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், நேற்று இரவு வரை தங்களிடம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மகன் திடீரென உயிரிழந்ததாகக் கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அவரது இறப்புக்கான உண்மையான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, செல்வத்தின் தாய் வசந்தா மற்றும் உறவினர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனை நேரில் சந்தித்து, மலேசியாவில் உயிரிழந்த தனது மகனின் உடலை விரைவாக சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்தபோது மகனின் உடலை மீட்டுத்தரக் கோரி தாய் வசந்தா கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்புவதாகக் கூறிய மகனை உயிரற்ற உடலாகக் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *