கம்பம் பகுதியில் தான் நேரடியாக வாகன சோதனையில் ஈடுபடவில்லை என்றும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பது குறித்தே பேசியதாகவும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.

கம்பம் தொகுதியில் ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ தன்னிச்சையாகச் செயல்பட்டு வாகனச் சோதனையில் ஈடுபட்டதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கம்பத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா கூறியது…

நான் எந்த வாகனத்தையும் சாலையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்யவில்லை. மதுபோதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் இளைஞர்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து, இளைஞர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில்தான் காவல்துறையினர் உரிய முறையில் வாகனச் சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் செயல்பட்டு வரும் FL2 மதுபான பார்களில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாகப் புகார்கள் வந்துள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் முறைகேடாக FL2 உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

FL2 உரிமம் பெற்ற பார்களில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இந்த விதிமுறைகளை மீறி உறுப்பினர்கள் அல்லாத பொதுமக்களுக்கும், இரவு 11 மணிக்கு மேலும் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து சூதாட்டம், குண்டுகளி ஆட்டம் உள்ளிட்ட செயல்கள் நடைபெறுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு, பெண்கள் தங்களது தாலியைக்கூட இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கலால் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படும்.விதிமீறல்களில் ஈடுபடும் மதுபான பார்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் பாதுகாப்பையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் FL2 மற்றும் FL3 மனமகிழ் மன்றங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவது தொடர்பாகத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார் இந்த

பேட்டியின்போது தமிழக வெற்றிக் கழக மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *