திருவாரூர்.

தண்ணீர் இன்றி கருகும் சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட சம்பா வயலில் அமர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், டெல்டா பாசனத்திற்கு 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைமடை பகுதிகளான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு இதுவரை போதிய தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால், வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் தேங்கியிருந்த தண்ணீரை இறைத்து, சுமார் 60 நாட்கள் ஆன சம்பா பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். தற்போது தண்ணீர் இல்லாததால் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பயிர்களை காப்பாற்ற முயன்றதாக கூறும் விவசாயிகள், பாதிக்கப்பட்ட வயல்களை இதுவரை அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

கருகிய சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், டெல்டா பகுதிகளை உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட சம்பா வயலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் எடுத்துரைத்து, மத்திய குழுவை அனுப்பி நேரில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *