திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, தீபம் ஏற்ற செல்ல முயன்ற சிவசேனா தமிழக மாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ்.ஆனந்த், கும்பகோணத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் சென்று தீபம் ஏற்றுவதற்காக சிவசேனா தமிழக மாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ்.ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் புறப்பட்டனர்.
இதையடுத்து, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வந்து கொண்டிருந்த அவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து வீட்டுக் காவல் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து சிவசேனா நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக சேவைக்காகவும், மக்கள் நலனுக்காகவும், இந்து மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தீபம் ஏற்றும் உரிமையை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுவோம் என்றும் சிவசேனா தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.