தஞ்சாவூர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு வருகிற டிசம்பர் 4 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.


தஞ்சாவூர் சரோஜினி நினைவு அரங்கில் நடைபெற்ற மாநாடு அழைப்பிதழ் வெளியிடு மற்றும் செய்தியாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூறியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16- வது மாநில மாநாடு “வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக” என்ற முழக்கத்தோடு நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

முதல் நாள் கலைப்பேரணியை சதிராட்ட கலைஞர் ரா.முத்துக்கண்ணம்மாள் தொடங்கி வைக்கவுள்ளார். அன்று மாலை திலகர் திடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரோகிணி, திரை இயக்குநர் ராஜூமுருகன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்க உள்ளனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாளில் டிச.5-ம் தேதி தமிழரசி திருமண மண்டபத்தில் மாநாடு தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகிக்கிறார், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வரவேற்புரையாற்றுகிறார். இதில் 700-க்கும் மேற்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

பின்னர் மாலை நடைபெறும் நிகழ்வில் “வெறுப்பின் கொற்றம் வீழ்க” என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், ஊடகவியலாளர் என்.ராம், பேராசியர் அருணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

தொடர்ந்து 6-ம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி தகர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கி.சந்துரு கருத்துரை வழங்கவுள்ளார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி சிறப்புரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளியிடப்படவுள்ளது.

பின்னர் மாலை 6 மணிக்கு “ஆகமத்தின் பெயரால் அநீதி” என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கருத்துரை வழங்க உள்ளார்.
டிச.7-ம் தேதி “அரசியல் சாசனத்தின் முகவுரை” என்ற தலைப்பில் ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் கருத்துரை வழங்க உள்ளார்.


இந்த நான்கு நாட்கள் நிகழ்விலும் பல்வேறு ஆளுமைகள் உரையாற்றவுள்ளனர். இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் இன்றைய அரசியல், சமுதாயம், கருத்துரிமை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் செம்மொழி வரலாற்று கண்காட்சி, இந்தி திணிப்பு எதிர்ப்பு கண்காட்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது என்றார்.


நிகழ்வில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன், மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளர் களப்பிரன், வரவேற்பு குழு பொருளாளர் ப.சத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *