திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம், ஓவரூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வெள்ளைக்குளத்தாங்கரை. இங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கான சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை. இது தொடர்பாக கடந்த 2024 செப்டம்பர் 24- ந்தேதி அன்று பாடை ஊர்வலம் நடத்தப்பட்டது.
அப்போது அதிகாரிகள் தலையிட்டு விரைவில் சாலை வசதி செய்துதருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். எனினும் இதுவரை அதிகாரிகள் சாலை வசதி செய்து தரவில்லை. இப்பகுதியைச் சார்ந்த தங்கையம்மாள் வயது 96 என்கிற மூதாட்டி காலமானார்.
இதனையடுத்து அவரது இறுதி நிகழ்ச்சிக்கு செல்லகூட முடியாத சூழ்நிலையில் சுடுகாடு சாலை இல்லாத நிலையில் அவ்வூர் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜ.வி.நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனையடுத்து சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஜ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.ஜோதிபாசு, முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே.பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலையில் இறந்த அம்மையாரின் உடலுடன் முத்துப்பேட்டை பைபாஸ் ஓவரூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் சிபிஎம் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வெள்ளைக் குளக்கரை மயான சாலையை இரண்டு மாத காலத்துக்குள் சாலையை புதுப்பித்து தருவதாக உறுதிமொழி கொடுத்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி விட்டு அம்மையாரின் உடலை திருத்துறைப்பூண்டி மின் மயானத்தில் எரியூட்டப்பட்டதது.