பெரம்பலூர்.டிச.02. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பின்னர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சமூக நல திட்டங்களால், எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அவர்கள் உணவுப்பொருட்கள் பெறுவதில் இருக்கும் சிரமத்தை போக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் வீட்டிற்கே பணியாளர்கள் நேரில் சென்று அவர்களுக்கான குடிமைப் பொருட்களை வழங்கும் சிறப்பான ஒரு திட்டமான “தாயுமானவர்” என்ற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனிவரும் காலங்களில் எவ்வித சிரமமுமின்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுப் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்பது திட்டத்தினுடைய சிறப்பாகும்.
தாயுமானவர் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் வட்டத்தில் 4,885 நபர்களுக்கு 76 வாகனங்கள் மூலமாகவும், ஆலத்தூர் வட்டத்தில் 4,049 நபர்களுக்கு 58 வாகனங்கள் மூலமாகவும், குன்னம் வட்டத்தில் 5,045 நபர்களுக்கு 69 வாகனங்கள் மூலமாகவும், வேப்பந்தட்டை வட்டத்தில் 4,789 நபர்களுக்கு 68 வாகனங்கள் மூலமாகவும், என மொத்தம் 18,768 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 271 வாகனங்கள் மூலம் குடிமைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
02.12.2025, 03.12.2025 மற்றும் 04.12.2025 ஆகிய தேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் குடிமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்த மாவட்ட ஆட்சித்தலைவர் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எக்காரணம் கொண்டும் சுணக்கம் இருக்கக் கூடாது. இத்திட்டத்தை முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி, கூட்டுறவு சார்பதிவாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.